
Surandai History
சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். தென்காசி மாவட்டத்தில் மிக முக்கிய நகரமாகும் . இது முக்கிய தொழில் நகரமாகவும் திகழ்கிறது. இங்கு 2008-ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. அமைவிடம் சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவிலும், அத்தியூத்து விளக்கில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. மற்ற நகரங்கள் அமைந்துள்ள விவரங்கள்: திருநெல்வேலி - 48 கி.மீ. சங்கரன்கோவில் - 30 கி.மீ. புளியங்குடி - 30 கி.மீ. பாவூர்சத்திரம் - 9 கி.மீ. கடையநல்லூர் - 15 கி.மீ. ஆலங்குளம் - 17கி.மீ. தென்காசி - 15 கி.மீ. போக்குவரத்து திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019-ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ. கே. புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து சுரண்டை வழியாக சென்னை, ஊட்டி, திருப்பதி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூரு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன. வரலாறு மதுரை நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் சுரண்டை பாளையம் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது இது சமீனாக மாற்றப்பட்டது. சுரண்டை நகரானது கீழ் சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை ஆகிய சிற்றூர்களின் ஒருங்கிணைப்பில் உருவானது ஆகும். கிராமமாக இருந்த இந்த ஊர் 1980-களில் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு 2021 ஆகத்து 24 அன்று சுரண்டை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானது 27 வார்டுகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.[3] மக்கள் தொகை பரம்பல் 2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இந்நகர் 15,437 வீடுகளும், 52,048 மக்கள்தொகையும் கொண்டது.[4][5] புவியியல் இவ்வூரின் அமைவிடம் 8.97°N 77.4°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.